மாடல் அழகியாக இருந்து ‛தானா சேர்ந்த கூட்டம்’ படம் மூலமாக திரையுலகில் நுழைந்தவர் மீரா மிதுன். அதன்பின்னர் அழகிப் போட்டி நடத்துவதாக மோசடி செய்தார் என்கிற சர்ச்சையில் சிக்கிய நிலையில், பிக்பாஸ் சீசன்-3 போட்டியாளராக உள்ளே நுழையும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அங்கே மற்ற போட்டியாளர்களுடன் மோதல் போக்கை மேற்கொண்ட சிக்கிய மீரா மிதுன் சில வாரங்களிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‛நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் தான் நடித்திருந்த காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி ஆகியவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்ட ஒரே காரணத்திற்காக படத்திலிருந்து நீக்கப்பட்டன என்று கூறி சமீபத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார் மீரா மிதுன்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்து வரும் ‛அக்னிச் சிறகுகள்’ படத்திற்கு தன்னை ஒப்பந்தம் செய்ததாகவும் தற்போது அந்த படத்தில் இருந்தும் தன்னை நீக்கி விட்டார்கள் என்றும் அதற்குப்பதிலாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார் என்றும் இன்னொரு பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

