தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர், தமிழில் நம்பர் 1 நடிகை எனப் பெயர் பெற்றுள்ளவர் நயன்தாரா. தமிழில் தொடர்ச்சியாக நான்கைந்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் அவருடைய மார்க்கெட்டும், சம்பளமும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தெலுங்கில் நேற்று(அக்.,3) வெளியான ‘சைரா’ படத்தில் நயன்தாரா தான் நாயகி என்று சொல்லப்பட்டது. படத்தில் தமன்னாவும் இருக்கிறார் என்றுதான் வெளியீட்டிற்கு முன்பாகச் சொன்னார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பலரும் படத்தின் நாயகியாக தமன்னா தான் தெரிகிறார், நயன்தாராவுக்கு அவ்வளவு முக்கியத்துவமில்லை என்ற கருத்தையே சொல்கிறார்கள்.
அதற்குக் காரணம் தமன்னாவின் கதாபாத்திரம். படத்தில் நடனப் பெண்ணாக ஊர் ஊராகச் சென்று சைராவின் பெருமைகளைப் பேசும் தமன்னா, ஆங்கிலேயர்கள் முன் நடனமாடப் பிடிக்காமல் தன்னைத் தானே பற்ற வைத்துக் கொண்டு, அங்கிருந்த வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்து உயிர்த் தியாகம் செய்கிறார். அந்தக் காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவர் மீது அனுதாபம் வருகிறது. ஆனால், சிரஞ்சீவியின் மனைவியாக நடித்தும் நயன்தாராவின் கதாபாத்திரம் கனமாக அமையவில்லை.
இதே கருத்தைத்தான் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ள விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நயன்தாராவுக்கு படத்தில் முக்கியத்தும் தராமல் ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா ரசிகர்கள் கருதுகிறார்கள்.

