உலக புகழ்பெற்ற ஷோலே படத்தில் வில்லன் அம்ஜத்கானின் தளபதியாக காவியா என்ற கேரக்டரில் நடித்த விஜு கோடேவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மராத்தி நாடகங்களில் நடித்து அதன்பிறகு மராத்தி படங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தவர். கயாமத் சே கயாமத் தக், வெண்டிலேட்டர், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.
சமீபகாலமாக நடிப்பில் இருந்து விலகி மும்பையில் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். 77 வயதான விஜு கோடேவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பாலிவுட் திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

