அக்டோபர் மாதம் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமாக உள்ளது. முதல் வாரத்திலேயே வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் ‘அசுரன்’ 4ம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘100% காதல்’ படமும் வெளியாகிறது.
இந்த இரண்டு நேரடித் தமிழ்ப் படங்களுடன் அக்டோபர் 2ம் தேதியே தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள ‘சைரா’ படம் வெளியாகிறது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் ‘அசுரன்’ படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் ‘வட சென்னை’ படத்தை விடவும் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
‘சைரா’ டப்பிங் படமென்றாலும் ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு தெலுங்கிலிருந்து வரும் பிரம்மாண்டமான படம், சிரஞ்சீவி நாயகன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா என இன்றைய இளம் நட்சத்திரங்கள் என்பதால் இந்தப் படத்தைப் பார்க்கவும் சிலர் தயாராக இருப்பார்கள்.
நம் மண் சார்ந்த கிராமியக் கதையான ‘அசுரன்’ படத்தின் போட்டியை மீறி ‘சைரா’ தமிழில் சாதிக்குமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

