பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இன்றைய இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கலாம், நமக்கு நிறைய புகழ் கிடைக்கும் என்றுதான் பலரும் அதில் கலந்து கொள்கிறார்கள். தற்போது மூன்றாவது சீசன் முடிவடையும் நிலையில் முதல் சீசன் வின்னர் ஆன ஆரவ்வின் முதல் படமான ‘மார்க்கெட் ராஜா’ டிரைலர் வெளிவந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் சீசனில் கலந்து கொண்ட ஆண் மாடலாக ஆரவ் இருந்தார். ஓவியாவுடன் ‘மருத்துவ முத்தம்’ விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார். மற்ற போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் சீசன் வெற்றியாளராகவும் பட்டத்தைக் கைப்பற்றினார்.
அவர் நாயகனாக நடிக்க ஆரம்பித்த முதல் படமான ‘ராஜ பீமா’ படத்திற்குப் பிறகு ஆரம்பித்த அவரது இரண்டாவது படமான ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் முதலில் வந்துவிடும் போலத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிலும் அவரது நடிப்பைப் பலரும் பாராட்டிப் பேசினார்கள். முதல் சீசனின் வெற்றியாளர் என்பதற்கான பெருமையை அவர் இனிமேல்தான் பெறப் போகிறார் போலிருக்கிறது.

