தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகப்போவதாகவும் தகவல்கள் உலவிய நிலையில், தனது திருமணம் குறித்த கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார் நடிகர் பிரபாஸ்.
பாகுபலி படத்துக்கு பின், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம் சாஹோ. அருண் விஜய், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கான புரமோஷன் வேலைகளுக்கு இடையில், நடிகர் பிரபாஸ் அளித்த பேட்டி:
பாகுபலி படத்துக்கு பின், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடித்தது ஏன் என்று கேட்கிறார்கள். பாகுபலிக்கு பின், எளிமையான காதல் கதையில் தான் நடிக்க திட்டமிட்டேன். இந்த கதையை கேட்டதும், ஆச்சர்யம் அடைந்தேன். எல்லோருக்கும் பிடித்ததால், அது படமாகவும் மாறியது.
பாகுபலிக்காக, 4 ஆண்டுகள், சாஹோவுக்காக, 3 ஆண்டுகள் என்று இவ்வளவு நீண்டகாலம் எடுப்பது ஏன் என்று என்னிடம் கேட்கிறார்கள். படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட காட்சிகளுக்காக இத்தனை காலம் தேவைப்பட்டது என்பதுதான் உண்மை.
எனது சம்பளம் 100 கோடி ரூபாய் என்று வதந்திகள் உலவுகின்றன. சாஹோ, என் நண்பர்கள் தயாரிக்கும் படம். 12 நிமிட காட்சிக்காக, 80 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். படத்தின் பட்ஜெட் மிக பெரியது. அந்த பட்ஜெட்டில் குறிப்பிட்ட சதவீதம் தான் என் சம்பளமாக இருக்கும். மற்றபடி, எல்லோரும் சொல்வது போல, நான் நூறு கோடி ரூபாய் சம்பளமெல்லாம் வாங்கவில்லை.
எனது திருமணம் எப்போது? என்று திரும்ப திரும்ப கேட்கப்படுகிறது. எப்போது நடக்க வேண்டுமோ, அப்போது எனது திருமணம் நடக்கும். அது காதல் திருமணமாகவும் இருக்கலாம்.
இவ்வாறு பிரபாஸ் கூறினார்.

