ஆர்யா, ரேணுகா மேனன் நடித்த, கலாப காதலன் படத்தை இயக்கியவர் இகோர். அதன்பிறகு இவர் இயக்கிய படம் திக் திக். பல வருடங்களுக்கு முன்பு தயாரான பேய் படம். இதில் இயக்குனர் கே.பாக்யராஜ் மகள் சரண்யா, மும்தாஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இமான் இசை அமைத்திருந்தார். சாண்ட்ரியா ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் மும்தாஜ் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தார். அந்த பள்ளியில் உலவும் பேயாக சரண்யா பாக்யராஜ் நடித்திருந்தார்.
என்ன காரணத்தாலோ அப்போது இந்தப் படம் வெளிவரவில்லை. படத்தில் நடித்த சரண்யா பாக்யராஜும், சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். மும்தாஜும் பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தை தூசி தட்டி எடுக்கிறார்கள். தற்போது படத்திற்கு வளையம் என்று புதிய டைட்டில் வைத்து படத்தை மெருகேற்றி, மேலும் புதிய காட்சிகளை படமாக்கி வெளியிட இருக்கிறார்கள். ஜி.மூவீஸ் சார்பில் ஜி.எம்.டேவிட் ராஜ் தயாரிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை அமலாபால் நேற்று வெளியிட்டார்.