3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தேவி படம் வெற்றி பெற்றது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் உள்பட பலர் நடித்திருந்தனர். ஐசரி கணேசுடன் இணைந்து பிரபுதேவா தயாரித்திருந்தார்.
உதவி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, கிராமத்தில் பிறந்து வளர்ந்த தமன்னாவை திருமணம் செய்து மும்பைக்கு அழைத்து வருவார். சினிமா ஏக்கத்தில் செத்துப்போன ஒரு நடிகையின் ஆவி, தமன்னா உடலுக்குள் புகுந்து கொண்டு தனது ஏக்கத்தை எப்படி தீர்க்கிறது. பிரபுதேவா அந்த ஆவியிடமிருந்து மனைவியை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் தேவியின் கதை.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய். பிரபுதேவா, தமன்னா கணவன் – மனைவியாக தொடர்கிறார்கள். இவர்களுடன் நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, ஜெகன், ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி உள்ளது.
படம் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ரிலீசுக்கு சரியான நேரம் பார்த்து காத்திருந்தார்கள். தற்போது கோடை விடுமுறையை மனதில் வைத்து வருகிற ஏப்ரல் 12ந் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமா அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது:
நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கோடை விடுமுறை என்பது எப்போதுமே குடும்ப பார்வையாளர்களுக்கானது, அவர்கள் திரையரங்குகளுக்கு வந்து நல்ல பொழுதுபோக்கு படங்களை ரசிக்கிறார்கள். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம் .
எல்லோருக்கும் பிடிக்கும் காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்குகள் உள்ளன. பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் வாய்ப்பை அளித்த அவருக்கு நன்றி. அவரது எனர்ஜி அபாரமானது, முதல் பாகம் போலவே இந்த படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார். தமன்னா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு ரசித்தார்கள் என்பது அவருக்கு தெரியும். இந்த படத்தில் அதை விடவும் சிறப்பாக நடிக்க முயற்சிகள் எடுத்தார்.
இந்த குழுவில் இருந்த எல்லோரும் அளித்த சிறந்த பங்களிப்பு தான் குறித்த காலத்தில் படத்தை முடிக்க காரணமாக இருந்தது. இந்த கோடைகாலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். என்றார்.

