ரஜினி நடிப்பில் உருவான படம் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படம். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம், கடந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் ரிலீசாகி பெரும் வசூலைக் குவித்தது. மொத்த வசூல் 600 கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டது. இதற்கிடையில், இந்தப் படத்தை, சீனாவில் பெரிய அளவில் வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டது. அதற்காக, படத்தை, சீன மொழியில் மொழி பெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடந்தது. கடந்த ஒரு மாத காலமாக இந்தப் பணி விறுவிறுவென நடந்து முடிந்து, தற்போது ரிலீசாகும் நிலைக்கு வந்து விட்டது.
அதற்கு முன்னால், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சீனாவில் பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரைவில் சீன மொழியில் வெளியாக இருக்கும் 2.0 படத்துக்கு பாலிவுட் ரோபோட் 2.0 என பெயரிடப்பட்டுள்ளது. சீனா முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தின் வசூலையும் சேர்த்தால், 2.0 படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.