மலையாள சினிமாவில் பிரபலமாகும் கதாநாயகிகள், அங்கிருந்து தமிழுக்கு வந்து இங்கேயே முகாமிட்டு முன்னணி நடிகைகளாக மாறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ரூட்டைத்தான் மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து முன்னணி நடிகையாக மாறிவரும் நடிகை அனு சித்தாராவும் பின்பற்ற இருக்கிறாராம்.
சமீபத்தில் வெளியான ‘பொதுநலன் கருதி’ என்கிற படத்தில் கருணாகரன் ஜோடியாக நடித்திருந்தவர் தான் இந்த அனு சித்தாரா. ஆனால் அந்த படம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு இவர் ஒப்பந்தமாகி நடித்த படம்.. அதற்கு பின் மலையாளத்தில் இவர் மளமளவென படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சீமான் மற்றும் ஆர்கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் அமீரா என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் அனு சித்தாரா. இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தியது என்பதால், இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் தனக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும் என திடமாக நம்புகிறாராம் அனு சித்தாரா