ஒரு நடிகைக்குத் திருமணம் பற்றிய அறிவிப்பு வந்த உடனே, திரையுலகத்தில் திருமணத்திற்குப் பின் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துவிடும். கடந்த சில வாரங்களாக வதந்தியாகப் பரவி வந்த ஆர்யா, சாயிஷா திருமணத் தகவல், நேற்று முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அழகும், திறமையும், குறிப்பாக நடனம் ஆடுவதில் அசாத்திய திறமையும் கொண்ட சாயிஷா திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என்றே திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஆர்யாவின் குடும்பம் திரையுலகப் பின்னணி கொண்ட குடும்பம் கிடையாது. அவர்கள் மலையாள முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சாயிஷா மகாராஷ்டிரா முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பப் பின்னணியால் தொடர்ந்து சாயிஷா நடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.
மேலும், சாயிஷா தற்போது ‘காப்பான்’ என்ற ஒரே ஒரு தமிழ்ப் படத்தில்தான் நடித்து வருகிறார். அவரைத் தேடி வேறு வாய்ப்புகளும் வரவில்லை. தமிழில் இதுவரை தொடர்ந்து 5 படங்களிலும், முன்னதாக தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்துள்ளார் சாயிஷா. திருமணத்திற்குப் பின் சாயிஷா நடிப்பாரா இல்லையா என்பதை இந்தச் செய்தியைப் பார்த்த பிறகுதான் அவரோ அல்லது அவரது வருங்காலக் கணவரான ஆர்யாவே தெரிவிக்க வேண்டும்.

