பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் சல்மான் யூசுப் கான். பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர். பிரபுதேவா ஹிந்தியில் நடித்த ஏபிசிடி, தமிழில் நடித்த லட்சுமி படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர், மீது சினிமா பெண் நடன கலைஞர் ஒருவர் மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் சினிமா நடன கலைஞராக பணியாற்றி வருகிறேன். வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ஆடிவருகிறேன். நடன இயக்குனர் சல்மான் யூசுப் கான், துபாய் நிகழ்ச்சி ஒன்றில் ஆட என்னை அணுகினார். இதற்காக என்னை அவர் ஒரு காபி ஷாபுக்கு அழைத்தார். அங்கு நிகழ்ச்சி சம்பந்தமாக பேசிவிட்டு திரும்பியபோது, நானே காரில் டிராப் பண்ணுகிறேன் என்று காரில் அழைத்து வந்தார்.
அப்போது எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் அவரை எதிர்த்து போராடினேன். சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்றார். பிறகு துபாயில் நிகழ்ச்சி முடித்து விட்டு திரும்பும்போது அவரது சகோதரரை அறிமுகப்படுத்தினார். அவரும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

