‘மாரி 2’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி, தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரௌடி பேபி’ பாடல் யு டியூபில் தமிழ் சினிமா வீடியோ பாடல்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுவரையில் முதலிடத்தில் இருந்து வந்த ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்..’ பாடலை பின்னுக்குத் தள்ளி தற்போது 9 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் கடந்து 10 கோடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் 9 கோடியே 13 லட்சம் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
‘ரௌடி பேபி’ பாடல் நம்பர் 1 இடத்தின் சாதனையையும் 9 கோடி பார்வைகளையும் 16 நாட்களில் நிகழ்த்தியிருக்கிறது. இவ்வளவு குறுகிய நாட்களில் எந்த ஒரு தமிழ்ப் படப் பாடலும் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியதில்லை.
ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோரது பாடல்கள்தான் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்று வந்தது. இப்போது அந்த சாதனைகளையும் யுவன் முறியடித்திருக்கிறார்.
இப்போது ‘ரௌடி பேபி’ பாடலை யு டியூபில் ‘4 கே’ வீடியோ தரத்திலும், ஆங்கிலம், ஹிந்தி சப்-டைட்டில்களுடனும் வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம் இந்தப் பாடலின் சாதனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆல்பம், மேக்கிங் பாடலாக அதிகப் பார்வைகளைக் கொண்டுள்ள ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் 17 கோடி பார்வை சாதனைகளையும் ‘ரௌடி பேபி’ கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பாடல் வீடியோ, ஆல்பம் வீடியோ ஆகியவற்றில் தனுஷ் முதலிடத்திலும், தென்னிந்திய அளவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற முதலிரண்டு படப் பாடல்களில் சாய் பல்லவிதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

