ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ்ப் படங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல, தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்களின் ஆதிக்கமும் அதிகமாகி வருகிறது. வரும் பொங்கலை முன்னிட்டு ‘பேட்ட, விஸ்வாசம்’ என இரண்டே இரண்டு படங்கள் வந்தாலும், அந்த இரண்டு படங்களையும் அதிக தியேட்டர்களில் வெளியிட்டு பொங்கல் விடுமுறைக்குள் லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் நினைக்கிறார்கள்.
அவ்வளவு போட்டிக்கிடையில் தெலுங்குப் படமான ‘என்டிஆர்’ படம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 27 தியேட்டர்களைப் பிடித்துவிட்டது. ‘மகாநடி’ படத்தின் தமிழ் டப்பிங்கான ‘நடிகையர் திலகம்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு போல இந்த ‘என்டிஆர்’ படத்திற்கும் கிடைக்கும் என நினைக்கிறார்கள்.
‘என்டிஆர்’ படத்துடன் ராம்சரண் நடித்துள்ள ‘வினய விதேய ராமா’ படமும் பொங்கலுக்கு வருகிறது. அந்தப் படத்தையும் கண்டிப்பாக சில தியேட்டர்களில் வெளியிடுவார்கள்.
தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆனால் மட்டும்தான் ஓடும். ஆனால், தெலுங்குப் படங்கள் தமிழ்நாட்டில் நேரடியாக தெலுங்குப் படங்களாகவே வெளியாகும். அவற்றை ரசிப்பதற்கென்றும் இங்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

