தமிழ் சினிமாவில் சென்டிமென்ட்டுகளுக்குப் பஞ்சமே கிடையாது. நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துதான் எதையும் செய்வார்கள். அந்த விதத்தில் கடந்த சில வருடங்களாக தன் படங்கள் பற்றிய விஷயங்களுக்கு வியாழக்கிழமை சென்டிமென்ட்டைக் கடைபிடித்து வந்தார் அஜித்.
அவருடைய படங்களின் போஸ்டர், டீசர், டிரைலர், இசை வெளியீடு, பட வெளியீடு என அனைத்துமே வியாழக்கிழமைகளில் மட்டுமே நடந்தது. அதிலும் குறிப்பாக அதையும் நள்ளிரவில் தான் நடத்துவார்கள். இது பலராலும் விமர்சனம் செய்தும் பேசப்பட்டு வந்தது.
அப்படியிருக்க நேற்று இரவு திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். வியாழக்கிழமை சென்டிமென்ட்டை மீறி ஞாயிற்றுக்கிழமையில் அது வெளியிடப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அஜித் ரசிகர்களுக்கு அது தாமதமாகத் தெரிந்தாலும் அதையும் சாதனைப் பட்டியலில் கொண்டு போய் சேர்க்கும் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்.
நேற்று திடீரென அந்த மோஷன் போஸ்டர் வெளியானதன் பின்னணியில் காரணம் இருக்கிறதாம். புயல் நிவாரண நிதி வழங்கிய விவகாரத்தில் அஜித், விமர்சிக்கப்பட்டார். மேலும் பொங்கலுக்கு விஸ்வாசம் படத்துடன் வெளியாக இருக்கும் ரஜினியின் பேட்ட படம் பற்றிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் விஸ்வாசம் பற்றி, பொங்கல் ரிலீஸை தவிர வேறு அப்டேட் இல்லாததால் ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். இதையெல்லாம் சரிகட்டவே திடீரென வியாழன் சென்ட்டிமென்ட்டை மீறி ஞாயிறு அன்று மோஷன் போஸ்டரை வெளியிட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.