தமிழ்த் திரையுலகில் வார வாரம் நான்கைந்து படங்கள் வெளிவந்து மிகப் பெரிய தடுமாற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு பெரிய படம் வருவதும், அதனால் மற்ற சிறிய படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்காமல் போவதும் தொடர்கதையாக இருக்கிறது.
அடுத்த மாதம் அக்டோபர் முதல் வாரத்தில் மட்டும் நான்கைந்து பெரிய படங்கள் மோத உள்ளன. இதனால், எந்தப் படத்திற்கு எவ்வளவு தியேட்டர்கள் கிடைக்கும் என்பது பிரச்சினையாக உள்ளது. படம் வெளியாகும் நாளன்றே பைரசி இணையதளங்களில் படங்கள் வெளிவந்துவிடுவதால் ஒரு படத்திற்கான வாழ்நாள் மிகவும் குறைந்து இரண்டு, மூன்று நாட்களுக்குள் சுருங்கிவிட்டது.
அக்டோபர் 4ம் தேதி விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ’96’, 5ம் தேதி விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன் நடிக்கும் ‘நோட்டா’, விஷ்ணு விஷால், அமலா பால் நடிக்கும் ‘ராட்சசன்’, சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘ஆண் தேவதை’, விவேக், தேவயானி நடிக்கும் ‘எழுமின்’ ஆகிய படங்கள் 5ம் தேதியும் வெளியாக உள்ளன. ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படங்கள் ஒரே சமயத்தில் போட்டியிடுவது நல்லதல்ல என்று திரையுலகினரே கருதுகிறார்கள்.
