ஒழுக்கத்தை மீறிய காரணத்திற்காக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வீரரான தனுஷ்கா குணதிலகா கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். 27 வயதாகும் தனுஷ்கா குணதிலகா இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் முதல் மற்றும் இரண்டாம் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தார். கடந்த 2017 அக்டோபரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின்போது இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு மறுநாள் காலை பயிற்சியில் ஈடுபட தவறியது, ஒழுங்கு நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஒழுக்கத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இவர் மீது விசாரணை நடத்தி வந்தது.
தற்போது அந்த விசாரணையின் முடிவில், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விளையாட தடை விதித்துள்ளது. சர்ச்சைக்கு பெயர் போனவர் இவர் பல்வேறு ஆட்டங்களில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டு இருப்பதால் இந்த தொடர், முடிந்ததும் இந்த தடை தொடங்கும் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் இவருக்கான போட்டி சம்பளத்தையும் தற்போது நிறுத்தி வைத்துள்ளது இலங்கை வாரியம்.
இதுபோன்று இவருக்கு நடப்பது இது முதல் முறை அல்ல. இந்த வருடத் துவக்கத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் ஒழுக்கத்தை மீறிய காரணத்திற்காக ஐசிசி நிர்வாகம் இவருக்கு ஒழுக்க புள்ளியில் இருந்து ஒரு புள்ளியை குறைத்தது.
நிலுவையில் இருந்த விசாரணையின் முடிவில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை அறிவித்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலகாவின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து 20 சதவீத பணத்தை குறைத்தது.
இந்த சம்பள குறைப்பு ஒரு வருட காலத்திற்கு நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

