உலக கோப்பை தொடரில் போட்டிகளை நடத்தி வரும் ரஷ்யாவும், ஆக்ரோஷமான அணியான குரோஷியாவும் இன்று அரையிறுதிக்கு நுழைய கடும் யுத்தத்தை நிகழ்த்த உள்ளன. இதற்காக இரண்டு அணிகளும் கடும் பயிற்சியோடு பல்வேறு வியூகங்களை அமைத்துள்ளன. ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று அசத்தியது. அடுத்தது எகிப்தை 3-1 என்று வென்றது. உருகுவேயிடம் 3-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. தனிநாடானப் பிறகு நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ரஷ்யா, முதல் முறையாக காலிறுதியில் விளையாடுகிறது.இந்த அணியில் டெனிஸ் செரிஷிவ், ஆர்டெம் டிஸ்யூபா ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து நட்சத்திர வீரர்களாக வலம் வருகிறார்கள். கோல் கீப்பர் இகோர் அகின்பீவ் இன்று குரோஷியாவின் கோல்களை தடுப்பதில் முனைப்பு காட்ட இருக்கிறார். போட்டியை நடத்தும் நாடு காலிறுதிக்கு நுழைந்ததில், கடைசியாக நடந்த 5 சந்தர்ப்பங்களிலும், போட்டியை நடத்தும் நாடே வென்றுள்ளது. தற்போது போட்டியை நடத்தும் ரஷ்யா அந்தப் பட்டியலில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளதால் இன்று அந்த நாட்டு மக்கள் பெரும்பாலோனோர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை நாக்அவுட் சுற்றில் வென்று மிரள வைத்ததைப் போல இப்போது அதீத பலத்துடன் இருக்கும் குரோஷியாவை வெல்லும் கடும் முயற்சியில் இறங்கியுள்ளது.டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரோஷியா கடந்த ஆட்டங்களில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் குரோஷியா, 2வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை எதிர்நோக்கி இன்று களம் காண்கிறது. இதுவரை தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அடங்கா காளையாக வலம் வருகிறது. குரோஷியா. 1998ல் கால்பந்து விளையாட்டுக்கு அறிமுக அணியாக களமிறங்கி அரை இறுதி வரை நுழைந்து, 3வது இடத்தைப் பிடித்தது. இந்த அணியில் லூகா மோட்ரிக், இவான் ராகிடிக் போன்றோர் அசத்தும் ஆட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள். இந்த உலக கோப்பையில் அதிரடி ஆட்டம், எதிரணியினை நிலை குலைய செய்யவும் தந்திரமான தடுப்பு ஆட்டம் என கலக்கி வரும் குரோஷியா இன்று ரஷியாவை வீழ்த்த காத்திருக்கிறது.