உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், பெல்ஜியம் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பலப் பரீட்சை நடத்துகின்றன. உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. தற்போது 13வது உலகக் கோப்பைகளில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது. நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை இந்த அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் பெற்றது. பெல்ஜியம் அணியின் லுகாகு 4 கோல்களுடன் அதிக கோலடித்தோரில் 2வது இடத்தில் உள்ளார். தடுப்பாட்டத்திலும் பல்வேறு யுக்திகளை கையாளுவது இந்த அணியின் பலமாக இருக்கிறது. பெல்ஜியம், ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என பின்தங்கியிருந்த நிலையில் தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து அபாரமாக வென்றது. எப்படிப்பட்ட நிலையிலும் இறுதியில் வெற்றி பெறுவோம் என அதீத நம்பிக்கையில் இருக்கிறது பெல்ஜியம். இன்று நடைபெறும் போட்டி குறித்து பெல்ஜியம் அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் கூறியதாவது: இது எங்களுக்கு பொன்னான வாய்ப்பு. பிரேசிலை வீழ்த்த ஒரு வியூகம் அமைத்துள்ளோம்.இந்த வாய்ப்பை தவற விட மாட்டோம். பெல்ஜியம் அணி வீரர்களுக்கு இது ஒரு கனவு ஆட்டமாக அமைந்துள்ளது. அந்த கனவை நனவாக்க பெல்ஜியம் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். பிரேசிலை எதிர்த்து ஆடுவது சவால்தான். அந்த சவாலை சந்திக்க இன்று தயாராக இருக்கிறோம். இன்று பிரேசிலுக்கு ேதால்வி தண்டனை தர தயாராக இருக்கிறோம் என பேசியுள்ளார். அதே வேளையில் தொடர்ந்து ஏழாவது முறையாக காலிறுதியில் விளையாடுகிறது பிரேசில். 2006 மற்றும் 2010ல் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. நெய்மரை நம்பி களமிறங்கி, இந்த உலகக் கோப்பையில் இதுவரை வெற்றி பெற்றுள்ளது. அனைத்து உலகக் கோப்பைகளிலும் பங்கேற்ற அணி, 5 முறை சாம்பியன் என்பது பிரேசிலுக்கு சாதகமாகும்.நடப்புத் தொடரில் பிரேசில் 3ல் இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தைப் பிடித்தது. முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் 1-1 என டிரா செய்தது, கோஸ்டாரிகாவை 2-0, செர்பியாவை 2-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 2-0 என மெக்சிகோவை வென்றது. 5 முறை சாம்பியனான பிரேசில் 16வது முறையாக காலிறுதியில் விளையாடுகிறது. இதுவரை 10 முறை அரை இறுதிக்கு நுழைந்துள்ள நிலையில் பெல்ஜியத்தை சர்வ சாதாரணமாக டீல் செய்யும் என நம்பிக்கையில் இருக்கிறது. இந்த நிலையில் பெல்ஜியம் அணியின் கோச் ராபர்டோ மார்டினஸ் கொடுத்த பேட்டிக்கு பிரேசில் அணி நெய்மர், பிலிப் காட்டினோ, கேப்டன் தியாகோ சில்வா, வில்லியன், மார்செலோ, பவுலினோ என்று ஒரு நட்சத்திர பட்டாளமே பதிலடி கொடுக்க களத்தில் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த யுத்தத்தில் மீண்டு கரையேறப் போவது யார் என இன்று இரவு தெரிந்துவிடும்.

