ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு ‘டுவென்டி–20’ லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கின்றன. இதன் பைனலுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் முன்னேறிவிட்டன. ஹராரேயில் நடந்த கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு மிர் (63), பீட்டர் மூர் (30) ஆறுதல் தந்தனர். கேப்டன் ஹாமில்டன் மசகட்சா (13), முசகண்டா (12), எல்டன் சிகும்புரா (2), வாலர் (13) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஆன்ட்ரூ டை 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் (3), அலெக்ஸ் கேரி (16) கைகொடுக்கவில்லை. அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல் (56), டிராவிஸ் ஹெட் (48) நம்பிக்கை அளித்தனர். ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

