கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள, கடுகு படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், தற்போது இயக்கியுள்ள படம் கோலி சோடா-2. இந்த படத்தில் இயக்குநர்கள் கவுதம் மேனன், சமுத்திரகனி ஆகியோருடன் பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், சுபிக்ஷா, கிரிஷா குருப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். ஜூன் 14-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விஜய் மில்டன் பேசுகையில்,
இந்த படத்திலும் கோலிசோடா படத்தைப்போன்று மூன்று இளைஞர்களைப்பற்றி கதையைத்தான் படமாக்கியிருக்கிறேன். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சிகள், போராட்டங்கள் தான் இந்த படம்.
இந்த படத்தையும் சிறிய பட்ஜெட்டில் தான் படமாக்கியிருக்கிறேன். ஆனபோதும் டைரக்டர் சமுத்திரகனியை ஒரு வேடத்தில் நடிக்க வைக்க நினைத்தபோது அவரை அணுகி அவர் நடிக்க வேண்டிய கேரக்டர் பற்றியும், படத்தின் பட்ஜெட் பற்றியும் சொன்னேன்.
அப்போது அவர், இப்போது ஒரு பைசாகூட சம்பளம் தரவேண்டாம். நான் நடித்து தருகிறேன். படம் வியாபாரம் ஆன பிறகு தந்தால் போதும் என்று சொல்லி நடித்துக் கொடுத்தார். படம் ஜூன் 14-ந்தேதி திரைக்கு வருகிறது. ஆனால் இன்னமும் சமுத்திரகனிக்கு சம்பளம் கொடுக்கவில்லை.
அவருக்கு இந்த படத்தில் வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒரு கேரக்டர். அப்படிப்பட்டவர் போராடும் இளைஞர்களுக்கு எந்த மாதிரி உறுதுணையாக இருக்கிறார் என்பது போன்ற வேடத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் கவுதம் மேனன் படத்தின் தொடக்கத்தில் வருவார், பின்னர் படம் முடியும்போது வருவார். மொத்தம் 20 நிமிடங்கள் வந்தாலும் அவரது கேரக்டர் மனதில் நிற்கும். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அந்த வகையில், டைரக்டர்கள் கவுதம் மேனனும், சமுத்திரகனியும் இந்த படத்திற்குள் வந்ததால் கோலிசோடா-2 பெரிய படமாகி விட்டது. கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவில்லை.
இவ்வாறு விஜய் மில்டன் பேசினார்.