1990-களில் கலக்கிய நடிகை சவுந்தர்யா. குடும்ப பாங்கான முகம், அசாதாரண அழகு இவற்றால் ரசிகர்களை வசீகரித்தார். 1993ல் பொன்னுமணி படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ரஜினி ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களிலும், காதலா காதலா படத்தில் கமல் ஜோடியாகவும், தவசி, சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்த் ஜோடியாகவும் நடித்தார்.
கன்னட சந்திரமுகி ஆப்த மித்ராவில் ஜோதிகா கேரக்டரில் நடித்தார். அதுதான் அவருக்கு கடைசிப் படம். பின்னாளில் அரசியலில் குதித்த சவுந்தர்யா தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி பலியானார்.
தெலுங்கு ரசிகர்கள் இவரை ஜூனியர் சாவித்ரி என்றே அழைத்தார்கள். தற்போது சாவித்ரி படம் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கும் நிலையில் சவுந்தர்யாவின் வாழ்க்கையும் சினிமாவாக தயாரிக்கப்பட இருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி இதனை அறிவித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இதனை தயாரிக்க இருப்பதாகவும், சவுந்தர்யா கேரக்டரில் நடிக்க அவரைப்போன்ற முகத்தோற்றம் கொண்ட நடிகையை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். சாவித்ரி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

