தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான கதைகளைக் கொண்ட படங்கள் வந்துள்ளன. ஒரே மாதிரியான காட்சிகளைக் கொண்ட படங்களும் சில படங்களில் இடம் பெற்றிருக்கின்றன. சில சமயங்களில் கதாபாத்திரங்களின் தன்மையும் சில படங்களில் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு சிக்கல் தற்போது ‘இரும்புத்திரை’ படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட தெலுங்குப் படமான ‘என் பேர் சூர்யா, என் வீடு இந்தியா’ படத்தின் கதாநாயகன் ஒரு ராணுவ அதிகாரி. ஆனால், எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர். அவர் மீது உயர் அதிகாரிகளும், பலரும் குற்றம் சாட்டுபவர்கள். இதனால், அந்த அதிகாரியின் மேலதிகாரி அவரை ஒரு சைக்காலஜி டாக்டரிடம் சென்று கோபத்தைக் குறைக்கும் பயிற்சி எடுத்து சான்றிதழ் வாங்கி வரச் சொல்லி உத்தரவிடுவார்.
அதே மாதிரியான காட்சிகள் ‘இரும்புத்திரை’ படத்திலும் இடம் பெற்றுள்ளன. ஆனால், ‘என் பேர் சூர்யா’ படத்தில் கதாநாயகன் அல்லு அர்ஜுன், சைக்காலஜி டாக்டர் அர்ஜுன். ‘இரும்புத் திரை’ படத்தில் கதாநாயகன் விஷால், சைக்காலஜி டாக்டர் சமந்தா. அது மட்டும்தான் வித்தியாசம்.
எப்படி இப்படி ஒரே மாதிரியான ஒற்றுமை என ‘இரும்புத்திரை’ குழுவிடம் விசாரித்தோம். இந்தப் படத்தை 4 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்களாம். இந்த ரகசியத்தை யாரோ ‘சூர்யா’ குழுவினரிடம் ‘லீக்’ செய்திருக்கிறார்கள். ‘இரும்புத்திரை’ கதையே நம் தனிப்பட்ட ரகசியங்களை டெக்னாலஜி மூலம் எப்படி திருடுகிறார்கள் என்பதுதான் ஹைலைட். படத்தில் இருப்பது அவர்களுக்கு நிஜமாகவே நடந்திருக்கிறது.