இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் வசூல் சாதனை படைத்த ‘பாகுபலி 2’ படம், இங்கு வெளியான பின் ஒரு வருடம் கழித்து சீனாவில் கடந்த வாரம் வெளிவந்தது. சமீப காலமாக இந்தியாவில் இருந்து சீனா சென்ற ஹிந்திப் படங்கள் பெரிய வசூலைக் குவித்துள்ளன. ஆனால், ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களுமே சீனா ரசிகர்களிடம் பெரிய ஈர்ப்பைப் பெறவில்லை.
கடந்த 5 நாட்களில் இந்தப் படம் சுமார் 61 கோடி ரூபாய் மட்டும்தான் வசூலித்துள்ளதாம். முதல் மூன்று நாட்களில் இருந்த வசூல் அப்படியே குறைந்துவிட்டிருக்கிறது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் ஏறாது என்கிறார்கள். அதனால், சீனாவில் முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் வெற்றி பெற வாய்ப்பில்லை.
சீனாவில் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தால் அங்கு படத்தை வெளியிட்டவர் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்கிறார்கள். இதுவரை 9 மில்லியன் யுஎஸ் டாலர் அளவில்தான் வசூல் வந்திருக்கிறது.
இது போன்ற பல அரசர் கதைகள் சீனாவிலேயே வெளியாகியிருப்பதால் அவர்களுக்கு இந்தப் படம் பிரம்மாண்டமாகத் தெரியவில்லை என்றே விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.