பிரவீன் சத்தரு இயக்கத்தில் டாக்டர் ராஜசேகர், பூஜா குமார், கிஷோர், ஷ்ரத்தா தாஸ் மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் ‘பிஎஸ்வி கருட வேகா’.
ஆந்திராவிலுள்ள தும்மளபள்ளி யுரேனியம் திட்ட ஆலையிலிருந்து யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவை வடகொரியாவிற்கு எப்படி கடத்தப்படுகிறது என்பது தான் இந்தப் படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்த்து. தேசிய விசாரணை ஏஜன்சியின் தலைவராக டாக்டர் ராஜசேகர் நடித்திருந்தார்.
தும்மளபள்ளி எம்எல்ஏ, மத்திய உள்துறை அமைச்சர், இந்திய யுரேனியக் கழகத்தின் தலைவர் ஆகியோரும் படத்தில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்திய யுரேனியக் கழகம் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த்து. வழக்கை விசாரித்த நீதிபதி ‘பிஎஸ்வி கருடா’ படத்தை 6 மாதங்களுக்குத் திரையிடக் கூடாது என தடை விதித்துள்ளார். மேலும், யு டியுப், சமூக வலைத்தளங்கள், மற்றும் எந்த விதமான டிஜிட்டல் திரையிடலையும் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர் ராஜசேகர் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்த்து. இப்படத்தின் மீதான வழக்கு விசாரணை நான்கு வாரங்கள் கழித்து நடைபெற உள்ளது.
