கடந்த மாதம் வெளிவந்த படம் மெர்லின். விஷ்ணுப்ரியன், அஸ்வினி சந்திரசேகர், சிங்கம்புலி உள்பட பலர் நடித்திருந்தார்கள். கீரா இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் சாமியார் வேடத்தில் வருபவர் பெண்களுக்கு மட்டும் தான் அதிக அளவில் பேய் பிடிக்கும். அதற்கு காரணம் செக்ஸ் தான் என்று கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
“இந்த காட்சியும், வசனமும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் ” என்று சென்னை பெரவல்லூரை சேர்ந்த பிரவீணா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து தவறான கருத்துகள் இடம் பெற்று இருக்குமேயானால் அதனை நீக்கலாம் எனவும் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்சார் போர்ட், பட தயாரிப்பு நிறுவனம் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இயக்குனர் கீரா கூறியதாவது : மெர்லின் படத்தில் பெண்களுக்கு எதிரான எந்த கருத்தும் முன்வைக்கப்படவில்லை. பெண்களுக்கு பேய் பிடிப்பதற்கான பல்வேறு காரணங்களில் பாலியல் ரீதியான உளவியல் பிரச்சினையும் ஒன்று என்று தான் கூறியுள்ளோம். பெண்களின் அடிமனதில் உள்ள பாலியல் பிரச்சினைகள் சரியான புரிதல் இன்றி பேய்பிடித்தலாக வெளிப்படுகிறது என்பதுதான் நாங்கள் சொல்ல வந்த கருத்து. பேய் பிடித்த பெண்கள், பேய் ஓட்டுகிறவர்கள், மன நல மருத்துவர்கள் ஆகியோரிடம் கலந்து பேசிதான் அந்த காட்சியும், வசனமும் வைக்கப்பட்டது. என்றார் கீரா.