ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசனில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உள்ளூர் ஆட்டங்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது.
இதில் மொத்தம் 8 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதவுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூரில் 7 போட்டிகளிலும், வெளியூரில் 7 போட்டிகளிலும் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 7 உள்ளூர் ஆட்டங்களை மொகாலியில் 4 மற்றும் இந்தூரில் 3 என விளையாடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள விமான நிலையம் சீரமைப்பு பணிகளுக்காக ஏப்ரல் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், மே மாதம் 12ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பஞ்சாப் அணியின் உள்ளூர் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் உள்ளூர் ஆட்டத்தை ஏப்ரல் 8ம் தேதி விளையாட இருந்தது. அந்த போட்டி தற்போது பஞ்சாப் அணியின் உள்ளூர் ஆட்டமாக இருக்கும்.
மேலும், ஐபிஎல் 11வது சீசனின் எலிமினேட்டர் ஆட்டம் மற்றும் குவாலிபயர் 2 ஆட்டம் புனேவில் முறையே மே 23, 25 தேதிகளில் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.