ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர விமானம் அனுப்பியதில் இருந்து அவரின் உடல் வீட்டை சேரும் வரை தனி அக்கறை எடுத்துள்ளார் தொழில் அதிபர் அனில் அம்பானி. நடிகை ஸ்ரீதேவி தனது நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்றார். அங்கு தான் அவர் உயிர் இழந்தார்.
மோஹித் மர்வா தொழில் அதிபர் அனில் அம்பானி மனைவியின் அக்கா மகள் அந்தாரா மோதிவாலாவை திருமணம் செய்துள்ளார். ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்ததும் அவரின் உடலை மும்பை கொண்டு வர அனில் அம்பானி ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர தனது நிறுவனத்திற்கு சொந்தமான தனி விமானத்தை துபாய்க்கு அனுப்பி வைத்தார் அனில் அம்பானி. அந்த விமானத்தில் 13 பேர் அமர முடியும்.
ஸ்ரீதேவி இறந்த செய்தி சனிக்கிழமை இரவு வெளியானது. ஞாயிற்றுக்கிழமை காலை அனில் அம்பானியின் தனி விமானம் துபாயை அடைந்தது. ஸ்ரீதேவி இறந்த சில மணிநேரங்களில் விமானம் துபாய் சென்றது.
ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தபோது அனில் அம்பானி விமான நிலையத்திற்கு சென்றார். ஸ்ரீதேவியின் உடலை அவரின் வீட்டிற்கு கொண்டு சென்றபோது அனில் அம்பானி தான் முதல் காரில் சென்றார்.
ஸ்ரீதேவியின் உடல் எந்தவித பிரச்சனையும் இன்றி அவரின் வீட்டை அடைய வேண்டும் என்பதில் அனில் அம்பானி தீவிரமாக இருந்தார். அவர் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொண்டது ஸ்ரீதேவியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.