மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுடன் தனி விமானம் துபாயில் இருந்து புறப்பட்டது. இன்று இரவுக்குள் மும்பை வந்தடைகிறது. துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது சனிக்கிழமையன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
துபாயில் உள்ள ரிஷி மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கையை நேற்று கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டது. அதில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் அறிக்கையில் இருந்தது. நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு தவறுதலாக பாத் டப்பில் விழுந்து மரணமடைந்தார் என்றும், அவரது ரத்த மாதிரியில் ஆல்கஹால் இருந்ததும் தடவியல் சோதனையில் தெரிய வந்துள்ளதாக கலீச் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, அவரது உடல் இந்தியா கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்பட அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் துபாய் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனால் அவரது உடலை மும்பை கொண்டு செல்வதில் தாமதமானது. துபாய் போலீஸிடம் இருந்து இந்த வழக்கு பொது வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. போனி கபூரின் வாக்குமூலம், தடயவியல் பரிசோதனை அறிக்கையை வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித குற்றவியல் நோக்கமும் இல்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டனர். இந்த நிலையில், இந்திய தூதரகத்தின் முறையான ஆவணங்களைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக துபாய் போலீஸார் விசாரணை முடிவுக்கு வந்தது.
ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைக்கும் அனுமதி சான்றிதழை அவரது குடும்பத்தாரிடம் துபாய் காவல்துறையினர் கொடுத்தனர். அனுமதி சான்றிதழ் கிடைத்த நிலையில் ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்த எடுத்துச் சென்றனர். இந்த நடைமுறை முடிந்தவுடன் போனிகபூரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதற்காக கடந்த 4 நாட்களாக துபாய் விமான நிலையத்தில் 13 பேர் பயணிக்க கூடிய அனில் அம்பானியின் விமானம் தயார் நிலையில் இருந்தது. அனைத்து பிரச்சினைகளும் ஒருவழியாக முடிவுக்கு வந்ததை அடுத்து எம்பாமிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் ஏற்பட்டது. தனி விமானம் துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடலுடன் இந்தியா புறப்பட்டது.
மும்பைக்கு கொண்டு வரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளைய தினம், திரை உலக பிரபலங்கள், ஸ்ரீதேவியின் ரசிகர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். இதன் பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மும்பையில் உடல் தகனம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.