ஸ்ரீதேவியின் உடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின்னர் இரவு 7 மணிக்கு அவரது உடல் மும்பை வருகிறது. அவருக்கு இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும். துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண விழாவில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷியுடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். ஆனால் அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது திடீர் இறப்பால் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களும் மீளா சோகத்தில் உள்ளனர். அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. துபாயில் காவல் துறை அலுவலக நேரம் இன்னும் தொடங்காததால் பிரதே பரிசோதனை அறிக்கை வழங்கப்படவில்லை. இன்னும் சில நிமிடங்களில் அந்த சான்றிதழ் வழங்கப்பட்டு அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் எம்பாமிங் செய்ய கொண்டு செல்லப்படும். இதன் பிறகு பிற்பகல் 3.30 மணிக்குள் உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும். பின்னர் தனி விமானம் மூலம் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வருகிறது ஸ்ரீதேவியின் பூத உடல். அங்கு குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை அவருக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. அவரது உடலை காண வேண்டும் என்பதற்காக மும்பை அந்தேரியில் உள்ள லோகன்ட்வாலா காம்ப்ளஸில் உள்ள அவரது வீடு முன்பு ரசிகர்கள் திரண்டுள்ளனர்.