சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப், சகால் இருவரும் இந்திய அணிக்கு வரமாக வந்துள்ளனர். இவர்களின் கலக்கல் ஆட்டம் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க ஒரு நாள் தொடரில் முதல் முறையாக சாதிக்க முடிந்தது.
இந்திய ‘சீனியர்’ சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜா ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டியில் தடுமாறி வந்தனர். இந்த நேரத்தில், துணிச்சலாக முடிவு எடுத்தார் கேப்டன் கோஹ்லி. இவர்களுக்குப்பதில், இளம் வீரர்களான குல்தீப், சகாலுக்கு வாய்ப்பு தந்தார். தென் ஆப்ரிக்க மண் புதிது என்பதால், இருவரின் செயல்பாடு பற்றி அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கேற்ப, மணிக்கட்டில் மாய ஜாலம் காட்டுகின்றனர். மில்லர், குயின்டன் உள்ளிட்ட வீரர்களை ‘சுழல் வலையில்’ வீழ்த்தினர். செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அசத்திய சகால், ஒரு நாள் அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் சாய்த்தார். இவருடன் குல்தீப்பும் இணைய, இந்திய அணி தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது. தற்போது, இந்த இருவரும் இந்திய அணியின் வரமாக மாறிவிட்டனர்.