சிறந்த ஆஸ்திரேலிய வீரருக்கான ‘ஆலன் பார்டர்’ விருதை, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 2வது முறையாக பெற்றார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த வீரருக்கான ‘ஆலன் பார்டர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘ஆலன் பார்டர்’ விருதை, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 2வது முறையாக பெற்றார். ஏற்கனவே இவர், 2015ல் இவ்விருது வென்றிருந்தார். சமீபத்தில் இவர், சி.ஏ., சார்பில் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை பெற்றிருந்தார்.
இதன்மூலம் ‘ஆலன் பார்டர்’ விருதை, அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில், 2வது இடத்தை ஷேன் வாட்சன் (2010, 2011), டேவிட் வார்னர் (2016, 2017) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 2 முறை இவ்விருதை தன்வசப்படுத்தினர். முதலிடத்தில் தலா 4 முறை கைப்பற்றிய ரிக்கி பாண்டிங் (2004, 2006, 2007, 2009), மைக்கேல் கிளார்க் (2005, 2009, 2012, 2013) உள்ளனர்.
பெர்ரிக்கு விருது: சிறந்த வீராங்கனைக்கான ‘பெலிண்டா கிளார்க்’ விருதை எலிஸ் பெர்ரி, 2வது முறையாக (2016, 2018) கைப்பற்றினார். சமீபத்தில் இவர், இங்கிலாந்துக்கு எதிராக சிட்னியில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க ‘பகலிரவு’ ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்திருந்தார்.