திரையுலகில் ரஜினி – கமல் படங்களின் மோதல் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தருணம். கடந்த 40 ஆண்டுகளாக இந்த இரு ஜாம்பவான்களின் படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும்.. வசூலைக் குவிக்கும். சமீப காலமாக இந்த இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அப்படி ஒரு மோதலை ரசிகர்கள் நிச்சயம் எதிர்ப்பார்க்கலாம்.
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2′ படம் வெளியாகாமல் நான்காண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வருகிறது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை விஸ்வரூபம் தயாரான 2013-ம் ஆண்டிலேயே படமாக்கி விட்டனர்.
ஆனாலும் நிதி நெருக்கடியால் மீண்டும் படத்துக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பு பொறுப்பை கமல்ஹாசனே ஏற்று இறுதி கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்தார். தற்போது இந்த படத்துக்கான ரீரிக்கார்டிங், டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது.
ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்தின் 2.0 படம் ஏப்ரலில் வெளியாகும் என்றும் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் கழித்து காலா படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் 2.0 தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக காலா படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. அந்த படத்துடன் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 மோதப் போகிறது. இந்த படத்தில் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். கமல் ஹாசன் இயக்கி உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.