தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடக்கும் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட், செஞ்சூரியனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் டுபிளசி (24), மகராஜ் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
இஷாந்த் அசத்தல்:
இரண்டாம் நாள் ஆட்டத்தில். முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேஷவ் மகராஜ் (18) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் டுபிளசி, டெஸ்ட் அரங்கில் தனது 17 வது அரைசதத்தை பதிவு செய்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்திருந்த போது, இஷாந்த் ‘வேகத்தில்’ ரபாடா (11) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இஷாந்த் பந்தில் டுபிளசி (63) போல்டானார். அஷ்வின் ‘சுழலில்’ மார்னே மார்கல் (6), சிக்கினார்.
முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 335 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. லுங்கே நிதிடி (1) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 4, இஷாந்த் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.
புஜாரா ஏமாற்றம்:
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. மார்னே மார்கல் ‘வேகத்தில்’ ராகுல் (10) அவுட்டானார். தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடிய புஜாரா (0), ‘ரன்–அவுட்’ ஆனார். பின் இணைந்த முரளி விஜய், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. மார்கல் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 16வது அரைசதமடித்தார்.
ரோகித் 10 ரன்:
மூன்றாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்திருந்த போது மகராஜ் ‘சுழலில்’ சிக்கிய முரளி விஜய் (46) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ரோகித் சர்மா (10), ரபாடா ‘வேகத்தில்’ வெளியேறினார். லுங்கே பந்தில் பார்திவ் படேல் (19) சரணடைந்தார். இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி, 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து, 152 ரன்கள் பின்தங்கி இருந்தது. கோஹ்லி (85), ஹர்திக் பாண்ட்யா (11) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மகராஜ், மார்கல், ரபாடா, லுங்கே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.