மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான, கோஸ்டாரிகா நாட்டு திரையுலகில், பீஹாரைச் சேர்ந்த, பிரபாகர் ஷரண் நடித்துள்ள படத்துக்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பீஹார் மாநிலம், பாட்னாவில் பிறந்த பிரபாகர் ஷரண், கோஸ்டாரிகாவில், லத்தீன் அமெரிக்க மொழியில் தயாரான திரைப்படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக, நான்சி டோபிள்ஸ் நடித்துள்ளார். இப்படத்தில், பாலிவுட் திரைப்படங்களில் வருவது போல், பாடல்கள், நடனங்கள் இடம் பெற்றுள்ளன. என்டேங்கிள்டு: தி கன்பியூஷன் என, பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கோஸ்டாரிகா, பனாமா நாடுகளிலும், மும்பையிலும் நடந்தது.
இப்படத்தை, முதலில், ஆஷிஷ் மோகன் என்பவர் இயக்கினார். ஆனால், கடைசியில், படத்தை முழுமையாக இயக்கும் பொறுப்பு, பிரபாகர் ஷரணிடம் விடப்பட்டது.
கோஸ்டாரிகாவைச் சேர்ந்த, ‘பசிபிக் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம் தயாரித்த இப்படம், 2017 பிப்ரவரியில், கோஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா, ஹோண்டுராஸ், கவுதமாலா, சான் சல்வடார் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டு, அமோக வெற்றி பெற்றது.
இந்த படத்தை, அமெரிக்காவிலும், லத்தீன் அமெரிக்க மொழி பேசும், மேலும், 10 நாடுகளிலும் திரையிட, தயாரிப்பு குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.