தென்னாபிரிக்க அணியுடன் போட்டி என்று வந்தால் டி வில்லியர்ஸ் எனது நெருங்கிய நண்பர் என்பதெல்லாம் கிடையாது என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடரை இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி என்பதை ஏற்க இயலாது. டி வில்லியர்ஸ் எனக்கு சிறந்த நண்பர். கிரிக்கெட்டை பொறுத்த வரையிலும், தனிப்பட்ட முறையிலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், போட்டி என்று வந்தால் நட்பு என்பதெல்லாம் கிடையாது. அதை தாண்டி அணியின் வெற்றிக்காக மோதிக் கொள்வோம்.
நாங்கள் டி வில்லியர்ஸ்சை ஆட்டமிழக்க செய்ய விரும்புவோம். அதைபோல் அவர்கள் என்னை, புஜாரா மற்றும் ரஹானேவை ஆட்டமிழக்க செய்ய விரும்புவார்கள். எந்தவொரு துடுப்பாட்ட வீரருக்கும் எதிராக, எனது மனநிலையில் இதைத்தவிர மற்ற ஏதும் இருப்பதாக தோன்றவில்லை.
ஒவ்வொரு வீரர்களும் அணியின் வெற்றிக்காக தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு அணியாக இணைந்து செயல்படவில்லை என்றால், தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடையாது” என கூறினார்.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் ரி-ருவென்ரி லீக் தொடரில், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக கோஹ்லி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் ஒரே அணிக்காக விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.