ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான ’தி ராக்’ என்றழைக்கப்படும் ‘டுவைன் டக்ளஸ் ஜான்சன்’, இந்திய ரசிகர்களின் ஆதர்ஷ விளையாட்டான கிரிக்கெட் குறித்து மனம் திறந்துள்ளார். வீடியோ நேர்காணல் ஒன்றில் கிரிக்கெட் குறித்து பேசிய ராக்கிடம், கிரிக்கெட் போட்டியின்போது நடுவர்கள் செய்யும் சைகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவுட், சிக்ஸர், மூன்றாவது நடுவர் முடிவு மற்றும் நோ பால் ஆகியவை குறித்து கள நடுவர் சைகை செய்வதுபோன்ற வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட ராக், சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் வீரர்கள் சிலரின் ஷாட்கள் காண்பிக்கப்பட்டு, அதன் பெயர் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
முதல் வீடியோவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் காண்பிக்கப்பட்டது. அது ஹெலிகாப்டர் ஷாட் என்பதைச் சரியாகக் கூறிய ராக், அடுத்து தில்ஷனின் ரேம்ப் ஷாட் மற்றும் ஸ்லோ பவுன்சர் என அடுத்தடுத்த வீடியோக்களில் காண்பிக்கப்பட்டவைகள் குறித்து சரியான விடை கூறி அசத்தினார். இந்தப் பேட்டியின்போது இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரிய அளவிலான ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் ராக் கூறினார். இந்த வீடியோ கேள்வி, பதில்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராக், ’கிரிக்கெட் விளையாட்டு குறித்து நிச்சயம் ஒருநாள் நான் முழுமையாக அறிந்துகொள்வேன். பொறுமையாக இருந்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.