2017 ல் அதிகம் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. விஜய் டி.வி.யில் இதைப் பார்த்தவர்களைத் தாண்டி ‘ஹாட் ஸ்டார்’ மூலம் பார்த்தவர்களும் அதிகம். நாளொன்றுக்கு மூன்று வீடியோக்களாவது ‘பிக்பாஸ்’ பற்றி யு-டியூபில் பதிவேற்றப்பட்டன. ‘ஓவியாவுக்கு ஆதரவாகக் கோடிக்கணக்கில் வாக்குகள் விழுந்தன’ என்று ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தபோது, ”ஓவியாவுக்கு ஓட்டுப்போடுகிறார்கள். எனக்கு ஓட்டு விழவில்லையே” என்ற அன்புமணியின் ஆதங்கமே, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் செல்வாக்கைச் சொல்லும்.
‘அடுத்தவர் வீட்டு அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதுபோலத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும்’ என்று தொடக்கத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கமல்ஹாசன்கூட இதை ஒருமுறை குறிப்பிட்டுப் பேசினார். ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் வாழ்வதை கம்யூன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டும் பேசினார். ஆனால், அடிப்படையில் இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதிகாரப் பகிர்வு, வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுதல், புரிந்துணர்வு ஆகியவை கம்யூன் வாழ்க்கையின் முக்கியமான பண்புகள். ஆனால், இவை பிக்பாஸ் வீட்டுக்குள் இல்லை. அங்கு நடக்கும் போட்டியும் புறணியும் ஈகோ மோதல்களுமே இந்த நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்புக்கு அடிப்படையாக இருந்தன.
ஒருவகையில் சொல்லப்போனால் டி.வி. சீரியல்களைப் பார்க்கும் மனநிலைதான் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மனநிலையும்கூட. ஆனால், சீரியல்களில் நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதும், அவை பாத்திரங்களுக்கு இடையேயான நிகழ்வுகள் என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் பாத்திரங்கள் அல்ல, ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகளைத்தான் நேரடியாகப் பிரதிபலிக்கிறார்கள் என்பது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. மேலும், சீரியல்களைப் பெண்கள்தாம் அதிகம் பார்க்கிறார்கள் என்பதற்கு மாறாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் பார்த்தார்கள், வாக்கெடுப்பிலும் பங்குகொண்டார்கள்.
இன்னொரு முக்கியமான அம்சம், பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது. தாங்கள் அறிந்த பிரபலங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சறுக்கி, தங்கள் உண்மை முகத்தைக் காட்டும்போது, அதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்வையாளர்கள் பார்த்தார்கள். இங்கே ‘அந்தரங்கம்’ என்னும் விஷயத்தை எடுத்துக்கொண்டால், உண்மையிலேயே இப்போது யாருக்கேனும் ‘பாதுகாக்கப்பட்ட அந்தரங்கம்’ இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான். நம்மைச் சுற்றிலும் கேமராக்கள் இருக்கின்றன. ஒருவர் வீட்டின் உள்ளறைவரை சாட்டிலைட்டால் ஊடுருவ முடியும். நம் கைரேகையை வைத்தால், நம் அத்தனை தகவல்களையும் கொட்டிவிடுகிறது ஆதார் எண். உண்மையில் இந்த அந்தரங்கத் தகவல்கள் யாருக்குப் பயன்படப்போகின்றன, நம் நலத்துக்காகத்தான் நமது தகவல்கள் சேகரிக்கப்படுகின்றனவா என்று ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. அந்தரங்கத்தை இழந்துவிட்ட நாம், ஒருவகையில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களாகவும் உணர்ந்தோம்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் பெரும்பாலானோர் பிரபலங்களே. பிரபலமல்லாத ஒரே ஆள் என்பதாலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அறியப்பட்டவராக இருந்ததாலும் ஜூலி மீதான எதிர்பார்ப்பும் ஆதரவு மனநிலையும் மக்களிடத்தில் அதிகமாகவே இருந்தன. ஆனால், இதற்கு நேர்மாறாக வீட்டுக்குள் இருந்த பிரபலங்களுக்கோ ஜூலி மீது அசூயையான மனோபாவம் இருந்தது. குறிப்பாக, ஜூலியைக் காயத்ரி ரகுராமும் ஆர்த்தியும் எதிர்கொண்ட விதம் இதைத் தெளிவாகக் காட்டியது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முழக்கங்கள் மாநில அ.தி.மு.க. அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் எதிராக இருந்தன. “நீ ஏன் அவங்களைத் திட்டினே?” என்று துருவித் துருவி ஜூலியிடம் கேட்டார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்த்தியும் பா.ஜ.க.வில் மயிலாப்பூர் தொகுதிக்காக சட்டமன்றத் தேர்தலில் விண்ணப்பித்த காயத்ரி ரகுராமும்.
இருவரின் மனநிலைக்கு எதிராக, ‘நம்மில் ஒருவர்’ என்ற மனநிலையுடன் பொதுமக்கள் தீவிரமாக ஜூலியை ஆதரித்தனர். ஒவ்வொரு எலிமினேஷனின்போதும் ஜூலி அபாயகட்டத்தில் நிறுத்தப்படுவதும், ஜூலி மக்களால் காப்பாற்றப்படுவதும் தொடர்ந்தது. இதை ஜூலி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ‘இருக்கும் இடத்தில் பிரச்னை இல்லாமல் வாழ வேண்டும் என்றால் வளைந்துகொடுத்துப்போவதுதான் சரி’ என்ற முடிவுக்கு வந்தார். ‘அக்கா’ என்று காயத்ரி ரகுராமை அழைத்தவர், காயத்ரியின் கைப்பாவையாகவே மாறிப்போனார். ஆனால், அப்போதும் ஆர்த்தி அவரை ‘ஃபேக்’ என்றார். காயத்ரியும் அவரை முழுமையாக நம்பவில்லை.
ஜூலியின் இந்த மாற்றம் பார்வையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. உண்மையில் நமது அன்றாட வாழ்க்கையில் குடும்பத்தில், அலுவலகத்தில், அரசியல் கட்சியில் என்று பல இடங்களில் பல்வேறு நிர்பந்தங்களுக்கு ஏற்ப நாம் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மாறிக்கொள்கிறோம். ஆனால், நம் மனமோ ஓர் உன்னதமான லட்சியவாதத்துடன் இருக்கிறது. அது நினைத்ததை நிறைவேற்றிக்காட்ட வேண்டிய எண்ணத்தையும் சூழ்நிலைக்கேற்ப வளைந்துகொடுக்காத உறுதியையும் விரும்புகிறது. பார்வையாளர்களின் இந்த மனநிலையின் அடிப்படையில் எந்த ஜூலி போராளியாகவும், நம்பிக்கைக்குரிய இளம்பெண்ணாகவும் பார்க்கப்பட்டாரோ, அதே ஜூலி வெறுக்கப்பட்டார். அதிலும் ஓவியாவுக்கு எதிராக அவர் சொன்ன சாட்சியம் அவருக்கு எதிராகவே திரும்பியது.
இதன் மறுதலையாக ஓவியா மீது மக்களுக்கு அபிமானம் ஊற்றெடுத்தது. ஓவியா அதிகாரத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தார்; கூடிக்கூடிப் பேசும் எந்தப் புறணிகளிலும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை; மற்றவரைப் பற்றி அவர்கள் முதுகுக்குப் பின்னால் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்தார்; ஒருவர் மீதான விமர்சனங்களை முகத்துக்கு நேராக வைத்தார்; சண்டையிடும் யாருடனும் உரையாடலை மேற்கொள்ளத் தயாராக இருந்தார்; எப்போதும் நடனமாடத் தயாராக, மழையில் நனையத் தயாராக சுதந்திரவுணர்வும் கொண்டாட்டமும் நிறைந்த பெண்ணாக இருந்தார். ‘களவாணி’ முதல் பல படங்களில் நடித்தும் ஓவியா பெறாத புகழைச் சில மாதங்களில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பெற்றார். ‘ஓவியா ஆர்மி’ என்ற வரலாற்றுச் சம்பவம் நடந்தது. காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்களால் ஓவியா தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு உருவானபோது, ‘#SaveOviya’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இவையெல்லாம் வீட்டுக்குள் இருந்த ஓவியாவுக்குத் தெரியாது. ஆனால், ஓவியா மீதான மக்கள் அபிமானம் நாளுக்கு நாள் அதிகரித்தது. எல்லோருமே ஓவியாவை விரும்பினாலும், எல்லோருமே ஓவியாவைப் போல வாழ்வதில்லை. ‘நாம் ஓவியாவை விரும்புகிறோம், காயத்ரியாக வாழ்கிறோம்’ என்று பலர் இணையத்தில் எழுதியதில் உண்மை இல்லாமல் இல்லை. நாம் நமது வீட்டுப் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கிறோமா, அவர்கள் விரும்பும் படிப்பைப் படிப்பதற்கு, அவர்கள் விரும்பும் உடையை அணிவதற்கு, அவர்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு அவர்களை அனுமதிக்கிறோமா என்று நமக்குள் கேள்வி கேட்டாலே, உண்மை புரிந்துவிடும்.
இதன் இன்னொருபக்கம் காயத்ரி ரகுராம். அதிகாரம் கைக்குக் கிடைத்தபோதும், கிடைக்காதபோதும் காயத்ரி அதிகார மனநிலையிலேயே நடந்துகொண்டார். தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கிக்கொள்வது, தனக்குப் பிடிக்காதவர்களுக்கு எதிரான கூட்டத்தை உருவாக்குவது, சதா மற்றவர்களைப் பற்றிப் புறணி பேசுவது என்று இருந்தாலும், தன்னை மற்றவர்களின் நலனில் அக்கறைகொண்ட, தாய்மைக்குணம் நிரம்பியவராகவே நம்பினார். அதிகாரத்தில் இருப்பவர்கள் பலரின் சிக்கலும் இதுதான். ‘உங்கள் நன்மைக்காகவே’ என்று சொல்லியே பல சந்தர்ப்பங்களில் அதிகாரம் திணிக்கப்படுகிறது. காயத்ரி ரகுராமின் வார்த்தைகளில் மேட்டிமைத்தனமும் அதிகாரத் திமிரும் நிரம்பி வழிந்தன. அதன் உச்சம் ஓவியாவை ‘சேரி பிஹேவியர்’ என்று குறிப்பிட்டது. இந்தப் பகுதி நிகழ்ச்சிக்கான டீஸரில் இருந்தது. சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததாலோ என்னவோ, நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், தான் ஆணவச்சொற்களை உதிர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காயத்ரி கடைசிவரை உணரவேயில்லை. ‘நான் கெட்டவார்த்தை பேசுகிறேன். அதைத்தான் கமல்ஹாசன் கண்டிக்கிறார்’ என்றே திரும்பத் திரும்பச் சொன்னார். உண்மையில் காயத்ரி பேசியது ‘கெட்ட வார்த்தை’ இல்லை, அவை அதிகார ஆணவத்தின், மேட்டிமை மனோபாவத்தின் சொற்கள்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரின் நடவடிக்கைகள் விசித்திரமானவை. தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பாரம்பர்யம் என்றெல்லாம் சொல்லி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற ஜூலியோ ‘தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர்’ என்று சொல்லிப் பலரையும் அதிரவைத்தார். பிக்பாஸ் போட்டியாளர்களால் ‘கவிஞர்’, ‘தமிழ் ஆசான்’ என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சினேகனும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர்’ என்று சொல்லி, கமல்ஹாசனால் எச்சரிக்கப்பட்டார். ”என்னதான் நான் ஹீரோவா இருந்தாலும்…” என்று அடிக்கடி சொல்லிக்கொண்ட ஷக்தியின் அதீத நம்பிக்கையைப் பாராட்டுவதா, பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. அதேபோல் ‘ரொம்ப நல்லவராக’ வாழ்ந்த கணேஷ் வெங்கட்ராம் தோற்றதும் குழப்பமான நிலைதான். மக்களுக்கு ‘ரொம்ப நல்லவர்கள்’ தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாமா என்று தெரியவில்லை. காயத்ரி ரகுராம், ஜூலியையும் ஓவியாவையும் நடத்தியவிதம் எவ்வளவு அருவருப்பானதோ அதே அளவு அருவருப்பானது கஞ்சா கருப்பு, பரணியை நடத்தியவிதம். ஆனால், காயத்ரியும் கஞ்சா கருப்பும் தங்களை நியாயவான்களாக நினைத்துக்கொள்வதுதான் சமூக யதார்த்தம்.