இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடருக்குப் பின், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் டிச., 10ல் தரம்சாலாவில் நடக்கவுள்ளது. சண்டிகர் (டிச. 13), விசாகப்பட்டனத்தில் (டிச., 17) அடுத்த இரு போட்டிகள் நடக்கவுள்ளன.
இதற்கான இந்திய அணியில் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டது. இவருக்குப் பதில் மும்பை வீரர் ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் அணியில் ஓய்வு தரப்பட்ட ‘ஆல் ரவுண்டர்’ பாண்ட்யா, அணிக்கு திரும்பினார். தவிர, சித்தார்த் கவுல் என்ற புதுமுக வீரருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
நாக்பூர் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் (8 விக்.,), ஜடேஜா (5 விக்.,) கூட்டணிக்கு, ஒருநாள் தொடரில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணிக்கு எதிராக டில்லி டெஸ்டில் பங்கேற்கும் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஒருநாள் அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சகால், பும்ரா, புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல்.