அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்துயானை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. என்றாலும் மகளுக்கு சினிமாவில் நல்ல இடத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் அர்ஜுனே தயாரித்து, இயக்கும் படம் சொல்லிவிடவா.
தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் சந்தன் என்ற புதுமுகத்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜெசி கிப்ட் இசை அமைக்கிறார், வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். நிவேதிதா அர்ஜுன், அஞ்சனா அர்ஜுன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஜெய்ஹிந்த உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள அர்ஜுன் முதன் முறையாக ஒரு காதல் கதையை இயக்கி உள்ளார். காதல் கதையாக இருந்தாலும் அர்ஜுனுக்கே உரிய தேசப்பற்றும் இருக்கும். இளம் காதல் ஜோடியின் பயணத்தில் ஒரு யுத்த களத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு அவர்கள் தங்கள் காதலையும் காப்பாற்றி, நாட்டுக்கும் எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் கதையின் ஒன் லைன். இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.
