இந்திய அணிக்கு குறுகிய ஓவர் போட்டிகளில் கடும் சவால்களை அளித்து வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான, தொடரை முடிவு செய்யும் இறுதி டி20 செவ்வாயன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
வானிலை ஆட்டத்தை பாழ்படுத்துவதற்கும் வாய்ப்புள்ள நிலையில், இந்திய அணியும் நியூஸிலாந்து அணியும் தொடரை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் 67/4 என்ற நிலையில் தோனி களமிறங்கினார். 18 ஓவர்கள் முடிவில் தோனி 28 பந்துகளில் 28 ரன்களையே எடுத்திருந்தார். வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 11.81 என்ற நிலையிலிருந்து 32.50 என்று சாத்தியமற்ற நிலைக்கு உயர்ந்தது. இதில் 8 ரன்களில் ஸ்டம்ப்டு ஆகியிருப்பார், 30 ரன்களில் இருந்த போது லாங் ஆஃபில் சாண்ட்னர் கேட்ச் விட்டார்.
ஐயர், கோலி, பாண்டியா ஆகியோருக்குப் பிறகு தோனி களமிறக்கப்பட்டார், இருப்பினும் அவரது திறமைக்கு 196 ரன்களுக்கு அருகில் வந்து தோற்றிருந்தால் கூட சவால் அளித்ததாகத் தெரியும். ஆனால் 9வது ஓவரில் இறங்கி 18வது ஓவரில் 28 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு பெரும்பங்கு காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழும்போது தோனியை 4-ம் நிலையில் களமிறக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் மழை காரணமாக நடைபெறாமல் போனது, நாளையும் வானிலை அறிக்கை மழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் போட்டி வாஷ் அவுட் ஆக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
திருவனந்தபுரத்தில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது, அதுவும் டி20 கிரிக்கெட்டில் தோனிக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்து வலுவடைந்துள்ள நிலையில் நாளைய போட்டி முக்கியத்துவம் அடைந்துள்ளது.
விவிஎஸ் லஷ்மண் கூட ஒருநாள் போட்டிகளில் தோனிக்கு இன்னமும் பங்கு உள்ளது என்று கூறியதோடு, டி20-யில் அவருக்கு மாற்று வீரரை முயற்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறார்.
அன்று 37 பந்துகளில் 49 ரன்கள் என்று ஸ்கோர்கார்ட் மட்டத்தில் மோசமான ஒன்றாக தெரியாவிட்டாலும் அவரால் தேவையான தருணத்தில் பெரிய ஷாட்களை சீராக சமீபகாலங்களில் அடிக்க முடியவில்லை, அன்று சாண்ட்னர், இஷ் சோதி அவரது லெக் ஸ்டம்பில், பேடிற்கு வீசி முடக்கினர். மேலும் அவரிடம் பல்வேறு விதமான ஷாட் ரேஞ்ச் இல்லை. 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என்று 5 பந்துகளில் அவரால் 26 ரன்களை அடிக்க முடிந்தாலும் 32 பந்துகளில் 23 ரன்களையே அவர் எடுக்க முடிந்தது பந்துக்கு ஒரு ரன் என்பதற்கும் குறைவான விகிதமே.
எனவே அடுத்த போட்டியில் தோனி எந்த டவுனில் களமிறக்கப்படுவார் என்பது ஒரு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.
தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரியும் போது தோனியை 4-ம் நிலையில் களமிறக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். எனவே அவர் கொஞ்சம் தன்னை நிலை நிறுத்திய பிறகு பெரிய ஷாட்களை ஆட முடியும் என்று கருதப்படுகிறது. டி20 சர்வதேச போட்டிகளில் தோனி ஒரேயொரு அரைசதத்தை மட்டுமே எடுத்துள்ளார். அன்றைய 49 ரன்கள் அவரது இரண்டாவது அதிகபட்ச டி20 ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டி20-யில் நியூஸிலாந்து அணி பீல்டிங் மோசமாக அமைய இந்திய அணி அபார வெற்றி பெற்றது, அதே போல் 2-வது போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் சொதப்பியதால் மன்ரோ அதிரடி சதம் அடித்தார். அறிமுக பவுலர் மொகமது சிராஜ் 4 ஓவர்களில் 53 ரன்கள் என்று ரன்களை வாரி வழங்கினார். ஆனாலும் பும்ரா, புவனேஷ்வர் குமாரினால் ஸ்கோர் 200 ரன்களுக்கும் கீழ் மட்டுப்படுத்தப்பட்டது.
ஆட்டம் முடிந்தவுடன் பேட்டிங் சரியில்லை என்று கோலியே ஒப்புக் கொண்டார். நாளைய போட்டியில் நியூஸிலாந்து வென்றால் டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடிக்கும்.
ஒருநாள் போட்டிகளுக்கு அணியில் தேர்வு செய்யப்படாத லெக் ஸ்பின்னர் இஷ் சோதி டி20 தொடரில் அருமையாக வீசி வருவது நியூஸிலாந்து அணி நிர்வாகத்தையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. டிரெண்ட் போல்ட் தொடர்ந்து தொடக்க வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்.
ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்களுக்கு அருமையாக ஆடினாலும் ஷாட் தேர்வில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும் ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் தனது நிஜமான ஆட்டத்துக்கு திரும்ப வேண்டியுள்ளது.
மொகமது சிராஜுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்வைக் கொண்டு வரலாம்.
ஆட்டம் 7 மணிக்குத் தொடங்குகிறது.