இரட்டை குடியுரிமை சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய சட்டப்படி இரட்டை குடியுரிமை உள்ளோர் பார்லிமென்ட் உறுப்பினராக முடியாது. தன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியவாறு, பார்லி.,யில் பேசி கவனத்தை ஈர்த்த லாரிஸ்சா வாட்டர்ஸ் என்ற கிரீன்ஸ் கட்சி எம்.பி., இந்த விவகாரத்தில் பதவி விலகினார்.இந்நிலையில், ‘துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் மற்றும் பியோனா நாஷ், மால்கம் ராபர்ட்ஸ், லாரிஸ்சா வாட்டர்ஸ், ஸ்காட் லுத்லாம் ஆகியோர் பார்லி.,க்கு தேர்வு செய்யப்பட்டது செல்லாது’ என நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பின் மூலம் பர்னபி ஜாய்ஸ் மற்றும் இரண்டு எம்.பி., க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். லாரிஸ்சா வாட்டர்ஸ், ஸ்காட் லுத்லாம் இருவரும் ஏற்கனவே பதவி விலகி விட்டனர்.
பர்னபி ஜாய்ஸ் கூறுகையில், ”தீர்ப்பை நான் மதிக்கிறேன். நாம் ஒரு அற்புதமான ஜனநாயகத்தில் வாழ்கிறோம். நீதியின் ஆழமான கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்றார்
துணைப் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஆளுங்கட்சியான லிபரல் கட்சியின் மால்கம் டர்ன்புல் அரசு மெஜாரிட்டி இழந்தது. 150 உறுப்பினர்களை கொண்ட பார்லி.,யில் லிபரல் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 76-ல் இருந்து 75 ஆக குறைந்தது. முக்கிய மசோதாக்கள் நிறைவேற வேண்டுமானால் சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் கூறுகையில், ”தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட எங்களுக்கு கூடுதலாக 6 எம்.பி., க்கள் உள்ளனர். அரசின் அலுவல்கள் வழக்கம்போல தொடரும்,” என்றார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள துணைப்பிரதமர், நியூசிலாந்து குடியுரிமையை ஆகஸ்டில் திருப்பி அளித்து விட்டார். டிச., 2ல் நடக்க உள்ள இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டு மீண்டும் தேர்வு பெறலாம்.