உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான காலத்தில் அசைக்க முடியாத அணியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ். அன்றைய காலகட்டத்தில் உலகின் சிறந்த லெவனைத் தேர்வு செய்திருந்தால் அந்த அணியின் 11 பேருமே போட்டியில் இருப்பார்கள். அப்படிப்பட்ட அணி இன்று உலகக் கோப்பைக்குத் தகுதிபெற போராடுகிறது. 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதில் அந்த அணிக்குப் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் இருவரையும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சேர்த்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்.
இங்கிலாந்தில் 2019-ல் நடக்கவுள்ள உலகக்கோப்பையானது 10 அணிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து தவிர்த்து, செப்டம்பர் 30, 2017 தேதி வரையில், ஒருநாள் தரவரிசையில் முதல் 7 இடங்களில் இருக்கும் பிற அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெறும். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகள் ‘குவாலிஃபையர்’ சுற்றில் விளையாடித் தகுதி பெற வேண்டும்.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் உலகக்கோப்பைக்கு ஏற்கனவே நேரடித் தகுதி பெற்றுவிட்டன. செப்டம்பர் 3 நிலவரப்படி இலங்கை 86 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், மேற்கிந்தியத்தீவுகள் 78 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் இருக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவில் இலங்கையைத் தரவரிசையில் முந்தினால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் நேரடித் தகுதி பெற முடியும்.
அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒருநாள் போட்டியையும், இங்கிலாந்து தொடரின் கடைசி 4 ஒருநாள் போட்டிகளையும் வென்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையைப் பின்னுக்குத்தள்ளி, உலகக்கோப்பை ரிசர்வேஷனை கன்ஃபார்ம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அயர்லாந்து அணிக்கு எதிராக நடக்க இருந்த ஒருநாள் போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டதால், அந்த அணியின் வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இனி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 5-0 என்றோ அல்லது 4-0 என்றோ வெல்ல வேண்டும். தப்பித்தவறி இங்கிலாந்து ஒரு போட்டியில் வென்றாலும் கூட வெஸ்ட் இண்டீஸுக்குச் சிக்கல்தான்! ஆனால், இங்கிலாந்து சாதாரண அணி இல்லை என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக் கோப்பை வாய்ப்பு ஏற்கனவே மதில்மேல் பூனையாக இருந்ததால், இத்தனை நாட்கள் விடாகண்டனாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் முன்னணி வீரர்களான கெய்ல், சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோரை மீண்டும் அணிக்கு அழைத்துள்ளது. கெய்ல் கடைசியாக, 2015 மார்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் அவர் அரைசதம் அடித்திருந்தார். அதன்பின் டி-20 அணியில் அவ்வப்போது இடம்பெற்றிருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இப்போது அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதால் கெய்லின் தேவையை உணர்ந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
கெய்லுக்கு அடுத்த வாரம் 38 வயது நிறைவடையப்போகிறது. உலகக்கோப்பைக்குப் பின் அவர் விளையாடுவது கேள்விக்குறியே. பல முன்னணி வீரர்கள் அந்த அணியிலிருந்து தோன்றியிருந்தாலும் லாரா, சந்தர்பாலுக்குப் பிறகு நம்பிக்கையான ஒரு வீரரை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இப்போது கெய்லை அணியில் இணைந்திருப்பது அவர் மீது அணி கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது. அந்த நம்பிக்கையை கெய்ல் பூர்த்தி செய்வாரா? கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சாம்பியன் அணியை மீட்டெடுப்பாரா?
முடியும்.. இந்தக் கரீபியப் புயல் சுழன்றடித்தால் நிச்சயம் அது சாத்தியமே..!
