இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, உலக கோப்பையில் நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில், வரும் 2019ல் (மே 30 – ஜூலை15) ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது. இதில், வரும் செப்., 30ம் தேதி வெளியாகும் தரவரிசையில் ‘டாப்–8’ இடத்தில் இருக்கும் அணிகள் மட்டும் நேரடியாக பங்கேற்கும். தற்போது இலங்கை (87 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (78) அணிகள் முறையே 8, 9வது இடங்களில் உள்ளன. இலங்கை அணி நேரடியாக தகுதி பெற, இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2ல் வெற்றி பெற வேண்டும். ஆனால், முதல் நான்கு போட்டியிலும் தோல்வியடைந்ததால், உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பின், அயர்லாந்துடன் ஒரு போட்டியில் விளையாடுகிறது. இந்த 6 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுவிட்டால், இலங்கை அணி நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாது.
இலங்கை அணி நேரடியாக தகுதி பெற, வெஸ்ட் இண்டீஸ் அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோல்வியடைய வேண்டும். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்கும் போட்டிகளின் முடிவுக்காக இலங்கை அணி காத்திருக்க வேண்டும். நேரடியாக பங்கேற்க முடியாத அணிகள், அடுத்தாண்டு நடக்கவுள்ள தகுதிச் சுற்றின் மூலம், வாய்ப்பு பெறலாம்.