‘களவாணி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிக்கவுள்ளார். இதற்கு ‘களவாணி 2’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.
விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது மீண்டும் சற்குணம் – விமல் இணைந்து பணிபுரிய திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு ‘களவாணி 2’ என பெயரிட்டுள்ளார்கள். ‘களவாணி’ கதையின் தொடர்ச்சியா, இல்லையென்றால் வேறொரு கதையை இரண்டாம் பாகமாக செய்யவுள்ளார்களா என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.
தற்போது ‘மன்னர் வகையறா’ படத்தைத் தொடர்ந்து ‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விமல். இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இமான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ‘களவாணி 2’ ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
‘களவாணி 2’ தொடங்குவதற்கு முன்பாக இயக்குநர் சற்குணமும், மாதவன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.