சச்சின் அணிந்த ‘நம்பர்–10’ எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடினார் இந்திய வீரர் ஷர்துல் தாகூர்
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், 25. மும்பையை சேர்ந்தவர். நேற்று இந்திய ஒருநாள் அணியில் 218 வது வீரராக அறிமுகம் ஆனார். இவருக்கு மும்பை வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணிக்கான தொப்பி வழங்கினார். இந்திய அணி பீல்டிங் செய்ய களமிறங்கிய போது, ஷர்துல் தாகூர் முதல் ஓவரை வீசினார். அப்போது இவர் 10ம் எண் கொண்ட ஜெர்சி அணிந்து இருந்தார். இது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில், இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின், ‘நம்பர்–10’ ஜெர்சி தான் அணிந்து விளையாடினார். இவரது ஓய்வுக்குப் பின், இந்த நம்பர் கொண்ட ஜெர்சியை, இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தியது இல்லை. ஐ.பி.எல்., தொடரில் விளையாடிய சச்சின் ஓய்வு பெற்ற பின், இவரது ‘நம்பர்–10’ ஜெர்சிக்கும், மும்பை அணியில் ஓய்வு கொடுத்து, சச்சினை கவுரவித்தது அணி நிர்வாகம். நிலைமை இப்படி இருக்க, நேற்று அறிமுகம் ஆன, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், ‘நம்பர்–10’ ஜெர்சி அணிந்து விளையாடியது, எல்லோரையும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
எது எப்படியோ, சச்சின் சாதித்தது போல, அவரது ராசியான எண் கொண்ட ஜெர்சி அணியத் துவங்கியுள்ள ஷர்துல் தாகூரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்தால் சரிதான்.