ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் புஜாரா 4வது இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் புஜாரா (876 புள்ளி), கேப்டன் விராத் கோஹ்லி (806) முறையே 4, 5வது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் ராகுல், 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரகானே, 11வது இடத்தில் உள்ளார்.
முதல் மூன்று இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (938), இங்கிலாந்தின் ஜோ ரூட் (902), நியூசிலாந்தின் வில்லியம்சன் (880) நீடிக்கின்றனர். தாகா டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய வங்கதேசத்தின் தமிம் இக்பால், முதன்முறையாக 14வது இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (6வது இடம்), மீண்டும் ‘டாப்–10’ வரிசையில் இடம் பிடித்தார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (884), ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் (852), 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (868), 2வது இடத்தில் உள்ளார். தாகா டெஸ்டில் ‘சுழலில்’ அசத்திய சாகிப் அல் ஹசன், 14வது இடத்துக்கு முன்னேறினார்.
‘ஆல்–ரவுண்டர்’களுக்கான தரவரிசையில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (489 புள்ளி), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (430), அஷ்வின் (422) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் நீடிக்கின்றனர்.