இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. கோஹ்லி, ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினர்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, 3–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி, கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவ், சகால், புவனேஷ்வர் மாற்றப்பட்டு, குல்தீப் யாதவ், மணிஷ் பாண்டே, 218வது அறிமுக வேகப்பந்துவீச்சாளராக ஷர்துல் தாகூர் இடம் பிடித்தனர். இலங்கை அணிக்கு மலிங்கா கேப்டனாக களமிறங்கினார்.
கோஹ்லி அபாரம்: இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் ஜோடி துவக்கம் தந்தது. பெர்னாண்டோ ‘வேகத்தில்’ தவான் (4) சிக்கினார். பின், இணைந்த ரோகித், கேப்டன் கோஹ்லி ஜோடி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 29வது சதம் விளாசினார். இந்த ஜோடியின் அசத்தல் ரன்குவிப்பு கைகொடுக்க, இந்திய அணி 27 ஓவரில், 200 ரன்களை எட்டியது.
ரோகித் கலக்கல்: இரண்டாவது விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்த போது, கோஹ்லி (131), மலிங்கா வேகத்தில் அவுட்டானார். ரோகித் சர்மா, ஒருநாள் அரங்கில் 13வது சதம் அடித்தார். மாத்யூஸ் வீசிய போட்டியின் 35வது ஓவரில் 4, 5வது பந்தில் பாண்ட்யா (19), ரோகித் சர்மா (104) அவுட்டாகினர். லோகேஷ் ராகுல் (7) ஏமாற்றினார்.
பின் தோனி, மணிஷ் பாண்டே இணைய, இந்திய அணி 42.4 வது ஓவரில் 300 ரன்களை கடந்தது. மணிஷ் பாண்டே ஒருநாள் அரங்கில் 2வது அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 375 ரன்கள் குவித்தது. தோனி (49), மணிஷ் பாண்டே (50) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு: கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணியை டிக்வெல்லா (14), குசால் மெண்டிஸ் (1), முனவீரா (11), திரிமான்னே (18), சிறிவர்தனா (39), ஹசரங்கா (22) என, வரிசையாக கைவிட்டனர். சற்று போராடிய மாத்யூஸ் (70), அக்சரிடம் ‘சரண்’ அடைந்தார். பின் வந்த விஷ்வா (5), மலிங்கா (0) இருவரும், குல்தீப்பின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக, இலங்கை அணி 42.4 ஓவரில், 207 ரன்னுக்கு ஆல்அவுட்டாக. இந்தியா, 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன்கள் அடிப்படையில் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.
முதல் இந்திய வீரர்
கண்டியில் 124 ரன் எடுத்த ரோகித் சர்மா, நேற்று கொழும்புவில் 104 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இலங்கை மண்ணில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை கிடைத்தது.
* தவிர, அன்னியமண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் மூன்று முறை, இரண்டு சதம் அடித்த இந்திய துவக்க வீரர் ஆனார். இதற்கு முன் 2013, 2016 (ஆஸி.,) தொடரில், இரண்டு சதம் அடித்தார். சேவக் (2000, நியூசி.,), காம்பிர் (2010, நியூசி.,) தலா ஒரு முறை, இரண்டு சதம் அடித்தனர்.
29வது சதம்
ஒரு நாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களில், இலங்கையின் ஜெயசூர்யாவை (28, 445 போட்டி) முந்திய கோஹ்லி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். இவர் 193 போட்டிகளில் 29 சதம் அடித்துள்ளார். 49 சதம் (463 போட்டி) அடித்த இந்தியாவின் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். பாண்டிங் (30 சதம், 375 போட்டி) 2வதாக உள்ளார்.
4வது இடம்
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்களில் கோஹ்லி 4வது இடத்தில் நீடிக்கிறார். இவர் 2012, ஹோபர்ட், மற்றும் தற்போது என, இருமுறை 76 பந்தில் சதம் அடித்தார். சேவக் (66, ராஜ்கோட், 2009), தவான் (71, தம்புலா, 2017), சேவக் (75, கொழும்பு, 2009) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
10வது முறை
ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி, சக வீரர்களுடன் சேர்ந்து 10வது முறையாக 200 அல்லது அதற்கும் மேல் என, ரன்கள் எடுத்தார். வேறு எந்த வீரரும், அதிகபட்சமாக 6 முறைக்கும் மேல் இதுபோல எடுத்தது கிடையாது.
200 ரன்கள்
நேற்று கோஹ்லி, ரோகித் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து, சச்சின்–கங்குலி, காம்பிர்–கோஹ்லி, தரங்கா–ஜெயவர்தனாவுக்கு (இலங்கை) அடுத்து, ஒருநாள் அரங்கில் 3 முறை 200 ரன்னுக்கும் மேல் சேர்த்த ஜோடி என் பெருமை கோஹ்லி, ரோகித்துக்கு கிடைத்தது.
300வது விக்கெட்
கோஹ்லியை அவுட்டாக்கிய இலங்கை அணி கேப்டன் மலிங்கா (203 போட்டி), ஒருநாள் அரங்கில், 300வது விக்கெட் கைப்பற்றினார். முரளிதரன் (202 போட்டி), சமிந்தா வாஸ் (235), ஜெயசூர்யாவுக்கு (294) அடுத்து இந்த இலக்கை எட்டிய 4வது இலங்கை வீரர் ஆனார்.
* குறைந்த போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் பிரட்லீ (171, ஆஸி.,), வக்கார் யூனிஸ் (186, பாக்.,), மெக்ராத் (200, ஆஸி.,), முரளிதரனுக்கு (202) அடுத்து மலிங்கா உள்ளார்.
2000 ரன்கள்
கோஹ்லி நேற்று 57 ரன்கள் எடுத்த போது, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய, 5வது வீரர் ஆனார். தவிர, குறைந்த இன்னிங்சில் (44) இந்த ரன்களை எடுத்த முதல் வீரர் இவர் தான். முதல் நான்கு இடங்களில் சச்சின் (3113), இன்சமாம் (2265, பாக்.,), தோனி (2261), சயீத் அன்வர் (2197, பாக்.,) உள்ளனர்.
3000 ரன்கள்
ஒருநாள் அரங்கில் கோஹ்லி, ரோகித் இணைந்து 3000 ரன்கள் எடுத்தனர். இந்த இலக்கை எட்டிய 9வது இந்திய ஜோடி என்ற பெருமையும் இவர்களுக்கு கிடைத்தது. இந்த ஜோடியின் சராசரி ரன் குவிப்பு 58.82 ஆக உள்ளது.
இது ‘பெஸ்ட்’
இலங்கை மண்ணில் இரண்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை கோஹ்லி–ரோகித்துக்கு (219) கிடைத்தது. இதற்கு முன் 197 ரன் (கோஹ்லி–தவான், 2017, தம்புலா), 188 ரன்கள் (காம்பிர்–தோனி, 2009, கொழும்பு) எடுத்து இருந்தனர்.
இது ‘பாசம்’
நேற்று கோஹ்லியை அவுட்டாக்கிய மலிங்கா, ஒருநாள் அரங்கில் 300வது விக்கெட் சாய்த்தார். உடனே அருகில் இருந்த இந்திய வீரர் ரோகித் சர்மா, மலிங்காவை கட்டிப் பிடித்து வாழ்த்து தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் இருவரும் மும்பை அணிக்காக விளையாடுவதால் ஏற்பட்ட பாசம் இது.
11 முறை
ஒருநாள் அரங்கில் அதிக முறை 375 ரன்னுக்கும் மேல் எடுத்த அணிகள் வரிசையில் இந்தியா (11 முறை) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா (9), ஆஸ்திரேலியா (5), இங்கிலாந்து (4) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளனர்.
131 ரன்கள்
கொழும்பு பிரேமதாசா மைதானம், கேப்டன்களுக்கு ராசி போல. இந்தியாவுக்கு எதிராக, இலங்கை கேப்டன் ரணதுங்கா (1997), இங்கு தான் அதிக ரன் (131) எடுத்தார். தற்போது கோஹ்லியும் 131 ரன் எடுக்க, இலங்கை மண்ணில், அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் ஆனார்.
375 ரன்கள்
ஒருநாள் போட்டிகளில் இலங்கை மண்ணில் இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோராக, 375/5 ரன் அமைந்தது. இதற்கு முன் 2009ல் 363/5 (இந்தியா) ரன் எடுத்தது தான் அதிகமாக இருந்தது.