ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள கட்டலோனியா பிராந்தியம் உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைத்தொடர்கள் என அழகு மிளிரும் பகுதியான இங்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பிராந்தியத்தின் தலைநகரான பார்சிலோனா நகரம் எப்போதும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். அதுபோலத்தான் நேற்று முன்தினமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள கடற்கரை நகரான லாஸ் ராம்ப்லாசில் பயங்கரவாதி ஒருவர் வேன் ஒன்றை வேகமாக ஓட்டி வந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் மோதச்செய்தார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
பின்னர் அவர் வேனை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைக்கண்ட பொதுமக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் வேனின் சக்கரத்தில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டினர் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பார்சிலோனா மற்றும் கட்டலோனியா பிராந்தியம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் வேனை ஓட்டி தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதியை தேடி வருவதுடன், நகரம் முழுவதும் ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்தினர்.
மற்றொரு தாக்குதல்
இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப்பின் பார்சிலோனாவில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள கேம்பிரில்ஸ் பகுதியில் சொகுசு கார் ஒன்றில் வந்த பயங்கரவாதிகள் சிலர் சாலையோரம் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதினர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போலீசார் அந்த பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து தாக்கினர். இதில் காரில் இருந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உடலில் வெடிகுண்டுகள் சுற்றப்பட்ட பெல்ட்டும் கட்டியிருந்தனர். எனினும் அதை சோதித்தபோது, அது போலியானது என தெரியவந்தது.
ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு
இந்த இரட்டை தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த ஸ்பெயின் அரசு நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியது. இதன் பயனாக ரிப்போல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கட்டலோனியா தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என கருதப்படுகிறது.
எனினும் வேனை ஓட்டி தாக்குதல் நடத்திய பயங்கரவாதி இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 8 பயங்கரவாதிகள் வரை ஈடுபட்டிருக்கலாம் எனவும், அவர்கள் பியூட்டேன் வாயு குண்டுகளை பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாகவும் ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் கண்டனம்
இதற்கிடையே ஸ்பெயின் இரட்டை தாக்குதலை ‘காட்டுமிராண்டித்தனமானது’ என வர்ணித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், இதில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளது.
இதைப்போல அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஸ்பெயின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த நெருக்கடி வேளையில் ஸ்பெயினுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும்’ என்று கூறியிருந்தார்.

