டி.என்.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் ரவிக்குமார் ரோகித் சதம் விளாச, கோவை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போராடிய காரைக்குடி அணி வெளியேறியது.
திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4 வது இடங்கள் பிடித்த காரைக்குடி, கோவை அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்ற கோவை அணி கேப்டன் முரளி விஜய், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
அனிருதா விளாசல்: காரைக்குடி அணியின் அனிருதா, 27 பந்தில் அரைசதம் அடித்தார். இது இத்தொடரில் இவர் அடித்த மூன்றாவது அரைசதம். இவர், 36 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். ஆதித்யா (31) அவுட்டாக, காரைக்குடி அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. பத்ரிநாத் (42), ஷாஜகான் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரோகித் நம்பிக்கை: கடின இலக்கைத் துரத்திய கோவை அணியை அனிருத் (11), முரளி விஜய் (34), ஹரிஷ் (16), முகமது (10) கைவிட்டனர். ரோகித் 23 பந்தில் அரைசதம் எட்டினார். சோனு வீசிய கடைசி ஓவரில், வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டன.
‘நோ பாலாக’ வந்த முதல் பந்தில், ரோகித் சிக்சர் அடித்தார். மீண்டும் வீசிய பந்தும் ‘நோ பாலாக’ அமைய, ரோகித் இன்னொரு சிக்சர் விளாச, கோவை அணி 19 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. அதிவேக சதம் அடித்த ரோகித் (102 ரன், 46 பந்து), சிவகுமார் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் கோவை, சேப்பாக்கம் அணிகள் விளையாடும். இதில் வெல்லும் அணி பைனலில் (ஆக., 20) துாத்துக்குடி அணியுடன் மோதும்.